குளு குளு தமிழகம்! நாளை 22 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் மே 09 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 22 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை
மே 13 வரை தொடரப்போகும் மழைப் பொழிவு
மே 11 ஆம் தேதியன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மே 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கடலூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், மே 14 அன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கான வானிலை
சென்னையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் (மே 08 & 09) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 33 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை
வெப்பநிலை குறைவு குறித்த முக்கிய அறிவிப்பு
மழை காரணமாகத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையக்கூடும். இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, வெப்பநிலை இயல்பை விடச் சற்று குறைவாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நிலவும் இந்த மாற்றங்கள் பொதுமக்களுக்குக் கோடை வெப்பத்திலிருந்து பெரிய ஆறுதலைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.