செப்.19 வரை தமிழகத்தில் கொட்டப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் தகவல்
செய்தி முன்னோட்டம்
தென்மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு விதர்பா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை, தமிழகப் பகுதிகள் வழியாக ஒரு வளிமண்டலக் காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வானிலை
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மாவட்டங்களுக்கான வானிலை நிலவரம்
கோவை மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளைத் தவிர்த்து, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், இதர மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மாநிலத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாகக்கூடும்.
மழை
செப்டம்பர் 16 முதல் 19 வரையிலான மழை முன்னறிவிப்பு
வரும் 16 ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவை மலைப்பகுதிகளில் கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அதனைத் தொடர்ந்து 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
இந்த மழைப்பொழிவு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் வெப்பத்தைத் தணிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை எச்சரிக்கை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த சில தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்தும், மாலை வேளையில் இதமான சூழல் நிலவவும் வாய்ப்புள்ளது.