தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் ஒரு வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாகச் சிவகிரி, சிட்டம்பட்டி மற்றும் திருப்புவனத்தில் தலா 4 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இருப்பினும், கரூரில் அதிகபட்சமாக 35.0° செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இந்த வெப்பநிலை உயர்வு பல இடங்களில் இயல்பை விட அதிகமாக உள்ளது.
வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பின்படி, ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 12 அன்று தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 13 அன்று கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் தென் கடலோர மாவட்டங்களிலும் கனமழை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.