LOADING...
யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களுக்குத் தமிழக அரசின் ₹50,000 ஊக்கத்தொகை; விண்ணப்பிப்பது எப்படி?
யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களுக்குத் தமிழக அரசின் ரூ.50,000 ஊக்கத்தொகை

யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களுக்குத் தமிழக அரசின் ₹50,000 ஊக்கத்தொகை; விண்ணப்பிப்பது எப்படி?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 13, 2025
03:17 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசுப் பணிகளுக்கான குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. 07.03.2023 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், தமிழ்நாட்டு இளைஞர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகுவதற்குப் பல பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 2025-2026-க்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, முதன்மைத் தேர்வில் (Mains) வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு ₹50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்திட்டம் ₹10 கோடி நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

முதல்நிலை தேர்வு

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை

இதன் ஒரு பகுதியாக, 2025ஆம் ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 659 மாணவர்களுக்கு ஏற்கெனவே ₹25,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நவம்பர் 11, 2025 அன்று வெளியான முதன்மைத் தேர்வு முடிவுகளின்படி, ஊக்கத்தொகை பெற்ற பயனாளிகளில் 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 87 பேர் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

விண்ணப்பம்

விண்ணப்பிப்பதற்கான நடைமுறை

தற்போது, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி மேற்கொள்ள வசதியாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு மூலம் ₹50,000 ஊக்கத்தொகையாக நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த ஊக்கத்தொகையைப் பெறத் தகுதியான மாணவர்கள், https://naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிக்கையைப் படித்து, நவம்பர் 13, 2025 முதல் நவம்பர் 24, 2025 வரை விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.