ஏஐ பிழைகள், போலி ஆசிரியர்கள்; பெரியார் நூலக புத்தக ஊழலில் சுதந்திரமான விசாரணைக்கு அண்ணாமலை கோரிக்கை
செய்தி முன்னோட்டம்
கோவையில் புதிதாக அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளதாக பிரபல தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். அகல்விளக்கு பதிப்பகம் மூலம் வாங்கப்பட்ட 1,800-க்கும் மேற்பட்ட புத்தகங்களில் தவறான வரலாற்றுத் தகவல்கள், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் மற்றும் த்ரிஷா விஜய் போன்ற போலி ஆசிரியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் ₹300 மதிப்புள்ள புத்தகங்கள் ₹1,500 வரை அதிக விலைக்கு விற்கப்பட்டு பல கோடி ரூபாய் நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளதாக அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
அண்ணாமலை கோரிக்கை
சுதந்திரமான விசாரணை குழு அமைக்கக் கோரும் அண்ணாமலை
இந்த புத்தக முறைகேடு விவகாரத்தில் அரசுப் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டது அடுத்த தலைமுறையின் கல்வி மற்றும் அறிவு சார்ந்த வளர்ச்சிக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகம் என வீ தி லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.
முந்தைய ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவால் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல், அவைகளின் ISBN எண்கள் மற்றும் கொள்முதல் ரசீதுகளைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஊழலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிய சுதந்திரமான விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சர் கண்டனம்
திமுகவின் ஊழல் ஆட்சிக்கு சான்று என முதலமைச்சர் விஜய் கண்டனம்
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய் இந்த பிரச்சினையில் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த 2025 நவம்பர் 5 அன்று திமுக ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையே இந்த புத்தகக் கொள்முதல் குழு உருவாக்கத்திற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
பெரியார் அறிவுலகத்தை உருவாக்கியதாக பெருமை பேசும் திமுக தலைமை, தரமற்ற புத்தகங்களை பரிந்துரைத்து ஊழல் செய்துள்ளதை உலகம் முழுவதையும் பார்க்க வைத்து சிரிக்க வைத்துள்ளதாகத் தனது அறிக்கையில் விஜய் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
திமுக விளக்கம்
திமுகவின் விளக்கம் மற்றும் தொடங்கும் உயர்மட்ட அரசு விசாரணை
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர் கோவி. செழியன், பெருமாள் முருகன் சுட்டிக்காட்டிய விஷயங்களை தவெக தனது குறுகிய அரசியலுக்காக பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், இந்த கொள்முதல் ஒப்பந்தங்கள் அனைத்தும் கடந்த ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டவை எனத் தெரிவித்துள்ள தற்போதைய அமைச்சர் ராஜ்மோகன், இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
தவறான புத்தகங்களை உடனடியாக நூலக அலமாரிகளிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் தற்சமயம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.