Loading...
தமிழக எம்எல்ஏக்கள் கார் வாங்குவதற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு: உச்ச வரம்பு நிர்ணயம் செய்து அரசு உத்தரவு
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்குவதற்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழக எம்எல்ஏக்கள் கார் வாங்குவதற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு: உச்ச வரம்பு நிர்ணயம் செய்து அரசு உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 22, 2026
09:32 am

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்குவதற்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ விதிகள் மற்றும் உச்ச வரம்புகள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் கார் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், சட்டமன்றப் போக்குவரத்துப் படி விதிகளில் முறைப்படி திருத்தங்கள் செய்யப்பட்டு தற்போது புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உச்ச வரம்பு

கார் வாங்குவதற்கான உச்ச வரம்பு நிர்ணயம்

வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, அமைச்சர்கள், சபாநாயகர், துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கொறடா உள்ளிட்ட உயர் பதவிகளில் உள்ளவர்கள் கார் வாங்குவதற்கு அதிகபட்சமாக ரூ.26 லட்சம் வரை உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்காக மொத்தம் 40 கார்கள் வாங்கப்படவுள்ளன.

அதேபோல், இதர சட்டமன்ற உறுப்பினர்கள் கார் வாங்குவதற்கு ரூ.15 லட்சம் உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டு, மொத்தம் 194 கார்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

இதன் மூலம் கார் வாங்குவதற்காக மட்டும் ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.40 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

படிகள்

வாகன மற்றும் உதவியாளர் படிகள்

கார் வாங்கும் நிதியுதவியுடன் சேர்த்து, வாகனங்களை இயக்கத் தேவையான ஓட்டுநர் ஊதியம், எரிபொருள் மற்றும் வாகனப் பராமரிப்பு செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப் படியும், அலுவலகப் பணிகளுக்காக உதவியாளர் படியாக மாதந்தோறும் ரூ.25,000 வழங்கப்படும் என்றும் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சில எதிர்க்கட்சிகளிடமிருந்து இத்திட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியிருந்த போதிலும், அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் இத்திட்டம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

ADVERTISEMENT