செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்
மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) பொது ஒப்புதலை, திரும்பப் பெறுவதாக தமிழக அரசு நேற்று (ஜூன் 14.,) அறிவித்துள்ளது. CBI, ஒரு மத்திய நிறுவனமாக இருந்தாலும், அது டெல்லி சிறப்பு காவல் ஸ்தாபனச் சட்டத்தின் (DPSEA) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. எனவே அதன் அசல் அதிகார வரம்பு, டெல்லிக்கு மட்டுமே. மற்ற மாநிலங்களில் விசாரணை நடத்த அந்தந்த மாநிலத்தின் ஒப்புதல் அவசியம். ஏற்கனவே, மேற்கு வங்காளம், கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தாங்கள் கொடுத்திருந்த அனுமதியை ரத்து செய்த நிலையில், தற்போது தமிழ்நாடும் அனுமதியை ரத்து செய்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட பிறகு இந்த அறிவிப்பு வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.