தமிழக அரசின் இலவச மிதிவண்டித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்குக் கல்விப் பயணத்தை எளிதாக்கும் வகையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் பயன்பெறுவர். இதுகுறித்துத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மாநிலம் முழுவதும் 5,34,000 மாணவ, மாணவிகளுக்கு ரூ.241 கோடி மதிப்பிலான மிதிவண்டிகளை காணொலி வாயிலாக வழங்கித் தொடங்கி வைத்ததாகக் குறிப்பிட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 11,449 மாணவச் செல்வங்களுக்கு நேரில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
விநியோகம்
மாவட்டங்களில் விநியோகம்
மேலும், குழந்தைகள் தின விழாவில் சிறப்பாகச் செயல்பட்ட அரசுத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு விருதுகளை அளித்துப் பாராட்டியுள்ளார். இதற்கிடையே, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் ரூ.11 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பீட்டில் 11 ஆம் வகுப்புப் பயிலும் 232 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மிதிவண்டிகளை வழங்கினார். மாணவர்கள் தங்கள் இலக்குகளை நிர்ணயித்துக் கல்வியில் வெற்றிபெற வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார். இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர வகுப்பைச் சார்ந்த அனைத்து மாணவர்களும் பயன் பெறுவர்.