தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர்
சென்னை புரசைவாக்கத்தில் பழமைவாய்ந்த கங்காதேஸ்வரர் கோயிலில் ராஜகோபுரம், சுற்றுபிரஹாரம் கருங்கல் பதிப்பு, நந்தவனம் சீரமைத்தல் போன்ற திருப்பணிகளை 1.25 கோடி செலவில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இதனை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அண்மையில் துவக்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகள் 8 மாதங்களில் முடிவடையும் என்று கூறினார். தொடர்ந்து, திமுக ஆட்சியேற்ற பிறகு 20 மாதங்களில் இதுவரை 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என்றும், பிப்ரவரி 26ம் தேதிக்குள் மேலும் 39 கோயில்களுக்கு கும்பாபிஷேகத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ரூ.6.30 கோடி செலவில் தங்கத்தேர் என அறிவிப்பு
தொடர்ந்து பேசிய அவர், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ரூ.6.30 கோடி செலவில் தங்கத்தேர் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி இக்கோயிலில் தங்கத்தேருக்கான பணிகள் நடைபெறவுள்ளது. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் இந்த கோயிலின் குளத்துக்கு வந்து சேருமாறும், குளத்திலேயே தண்ணீர் தேங்கும் வகையிலும் ரூ.1.30 கோடி செலவில் சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் பணிகள் நடக்கும் என்றும் கூறினார். இதனை தொடர்ந்து, கோயில்களில் உள்ள காலியிடங்கள் தகுதியானவர்களுக்கு முறையாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதுவரை கோயில்களில் உள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட 46 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.