Loading...
சுதந்திர தின விடுமுறைக்கு மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட காத்தாடி திருவிழா: அனுமதி முற்றிலும் இலவசம்
சுதந்திர தின விடுமுறைக்கு மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட காத்தாடி திருவிழா

சுதந்திர தின விடுமுறைக்கு மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட காத்தாடி திருவிழா: அனுமதி முற்றிலும் இலவசம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 14, 2026
10:39 am

செய்தி முன்னோட்டம்

சுதந்திர தின வார இறுதி விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் 'குளோபல் மீடியா பாக்ச்' இணைந்து நடத்தும் 5-வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழா மாமல்லபுரத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. மாமல்லபுரம் TTDC ஓஷன் வியூ வளாகத்தில் நடைபெறும் இத்திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கி வைக்கிறார். ஆகஸ்ட் 14 முதல் 16-ஆம் தேதி வரை தினமும் பிற்பகல் 3:00 மணி முதல் சூரிய அஸ்தமனம் வரை இத்திருவிழா நடைபெறவுள்ளது. தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் இந்தியாவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்முறை காத்தாடி வல்லுநர்கள் இதில் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய ஈர்ப்புகள்

முக்கிய ஈர்ப்புகள்: Sharktopus முதல் பொய்க்கால் குதிரை வரை

பிரம்மாண்டமான ஷார்க்டோபஸ், உலகளவில் புகழ்பெற்ற லபூபு, மற்றும் ராட்சத ஆக்டோபஸ் போன்ற கடல்வாழ் உயிரின கதாபாத்திர காத்தாடிகள் பறக்கவிடப்படவுள்ளன.

'Tamil Nadu Team Skyters' குழு சார்பில் சர்வதேச விருதுகளை வென்ற பொய்க்கால் குதிரை மற்றும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வடிவ காத்தாடிகள் வான்வெளியில் கலாச்சாரப் பெருமையை பறைசாற்றவுள்ளன.

200+ பிரம்மாண்ட காத்தாடிகள் பறக்கவிடப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

சாதகமான காற்று நிலவினால், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மாலையில் ஒளிரும் எல்.இ.டி காத்தாடிகள் வானில் மாயாஜாலம் செய்யவுள்ளன.

விதிமுறைகள்

பார்வையாளர்களுக்கான முக்கிய பாதுகாப்பு விதிமுறைகள்

நிகழ்ச்சியின் தடையற்ற செயல்பாடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தொழில்முறை வல்லுநர்கள் மட்டுமே காத்தாடிகளை பறக்கவிடுவார்கள்.

எனவே, பார்வையாளர்கள் தங்களது சொந்தக் காத்தாடிகளை விழாவிற்கு எடுத்து வரவோ அல்லது அங்குப் பறக்கவிடவோ கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சுதந்திர தின விடுமுறைக்கு மெரினா, வண்டலூர் போன்ற வழக்கமான இடங்களைத் தாண்டி, மாமல்லபுரத்தின் இந்த கடலோரக் காத்தாடித் திருவிழா பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

ADVERTISEMENT