தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை!
விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுப்பதற்காக அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு 6 மாதங்கள் வரைத் தற்காலிக தடை விதித்துள்ளது. மேலும், மஞ்சள் பாஸ்பரஸ் எனும் எலிக் கொல்லி மருந்துக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட 6 பூச்சிக்கொல்லிகள்: ப்ரோஃபினோபோஸ் (Profenophos), மோனோக்ரோடோபோஸ் (Monocrothophos), அசபேட்(Acephate), குளோர் பைரிபோஸ் சைபர்மெத்ரின்(Chlorpyriphos Cypermethrin), ப்ரோஃபினோபோஸ் சைபர்மெத்ரின் (Profenophos Cypermethrin), குளோர்பைரிபோஸ் (Chlorpyriphos) இந்த பொருட்களின் சில்லறை விற்பனையும் மொத்த விற்பனையும் ஆன்லைன் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கும் இது குறித்து கடிதம் எழுதப்படும். தடையை மீறி விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
எதற்காக இந்த தடை?
2017-18ஆம் ஆண்டில் நிகழ்ந்த விவசாயிகள் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருந்தது பூச்சிக்கொல்லி மருந்துகளே என்று வேளாண் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மஞ்சள் பாஸ்பரஸ் எனும் எலிக் கொல்லி மருந்துகள் முறையாகப் பதிவு செய்யப்படாதவை. ஆனால், இது மாநிலம் முழுவதும் சின்ன பெட்டி கடைகளில் கூட கிடைக்கிறது என்றும் வேளாண் இயக்குநரகம் தெரிவித்தது. மேலும், விஷத்தன்மைக் கொண்ட இது போன்ற மருந்துகள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஆபத்தாக இருப்பதால் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுப்பதற்கும் வேறு ஆபத்துகள் நிகழாமல் இருப்பதற்கும் இந்த அதிரடி முடிவைத் தமிழக அரசு எடுத்துள்ளது.