LOADING...
விதிகளில் அதிரடி தளர்வு! ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இனி ஆன்லைன் கட்டாயமில்லை! தமிழக அரசின் மூன்று முக்கிய மாற்றங்கள்!
ஜல்லிக்கட்டு விதிமுறைகளில் 3 முக்கிய மாற்றங்கள் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு

விதிகளில் அதிரடி தளர்வு! ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இனி ஆன்லைன் கட்டாயமில்லை! தமிழக அரசின் மூன்று முக்கிய மாற்றங்கள்!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 23, 2026
07:09 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைவதற்கு தமிழ்நாடு அரசு அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளது. ஜனவரி 17 அன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறந்த மாடுபிடி வீரர்களுக்குக் கால்நடை பராமரிப்புத் துறையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும், ₹2 கோடி மதிப்பில் உயர்தரக் காளைகள் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது விதிமுறைகளிலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

விதிமுறைகள்

மாற்றப்பட்ட 3 முக்கிய விதிமுறைகள்

ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மற்றும் வீரர்களின் கோரிக்கையை ஏற்று, கீழ்க்கண்ட மூன்று நடைமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன: ஆன்லைன் பதிவு முறை மாற்றம்: இதுவரை காளைகள் மற்றும் வீரர்களுக்குப் பின்பற்றப்பட்டு வந்த ஆன்லைன் பதிவு முறையில், உள்ளூர் காளைகளுக்கும் வீரர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைச் சரிசெய்ய, இனி அந்தந்த மாவட்ட அளவிலேயே பதிவுகள் குறித்து முடிவு செய்து கொள்ளத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் வீரர்களின் பங்கேற்பு உறுதி செய்யப்படும். ஆயுள் காப்பீடு கட்டாயம் இல்லை: போட்டியின் போது உயிரிழக்கும் வீரர்களுக்குத் தமிழ்நாடு அரசே உரிய நிவாரணத் தொகையை வழங்கி வருகிறது. எனவே, மாடுபிடி வீரர்கள் காப்பீடு செய்திருக்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

பத்திரம்

உறுதிமொழிப் பத்திரம் ரத்து

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துபவர்கள் இதுவரை முத்திரைத் தாளில் சமர்ப்பித்து வந்த உறுதிமொழிப் பத்திரம் வழங்கும் நடைமுறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் பதிவு முறையினால் உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்களின் தொடர் கோரிக்கையைப் பரிசீலித்த அரசு, காளைகளுக்குத் துன்பம் நேராவண்ணமும், போட்டிகள் தடையின்றி நடக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளது. மதுரை அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் உலகத் தரத்தில் செயல்பட்டு வரும் நிலையில், அரசின் இந்த புதிய அறிவிப்புகள் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement