LOADING...
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்; அகவிலைப்படி 55% இலிருந்து 58% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 55% இலிருந்து 58% ஆக உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்; அகவிலைப்படி 55% இலிருந்து 58% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 13, 2025
04:01 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக, அவர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (நவம்பர் 13) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்படி, தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 01.07.2025 முதல் முன்தேதியிட்டு 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். மக்களுக்காகத் திட்டங்களைத் தீட்டுவதிலும், அவற்றைச் செயல்படுத்திக் களப்பணியாற்றுவதிலும் முக்கியப் பங்காற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படிக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் உயர்த்தி வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 லட்சம்

16 லட்சம் பேருக்கு பயன்

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நேரடியாகப் பயனடைவார்கள். இந்தச் சலுகையை வழங்குவதன் மூலம் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1,829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் நலனை உறுதிசெய்யும் வகையில் இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.