
மீண்டும் கொரோனா பரபரப்பு: மத்திய மாநில அரசுகள் ஆலோசனை!
செய்தி முன்னோட்டம்
சீனாவில் அதிவேகமாக பரவி வரும் BF.7 கொரோனா இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதால் மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிர படுத்தி இருக்கின்றனர்.
இது குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது.
அதே போல், தமிழ்நாட்டில் தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா பாதுகாப்பிற்கான ஒரு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இதுவரை, இந்த BF.7 வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இன்னும் பரவிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
சீனாவில் கொரோனாவின் எண்ணிக்கை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருப்பதால் உலக நாடுகள் எல்லாம் இதே பீதியில் தான் இருக்கிறார்கள்.
தமிழகம்
கொரோனாவைத் தடுக்க எடுக்கப்பட்ட முடிவுகள்!
தமிழக ஆலோசனைக் கூட்டத்தில் கீழுள்ள முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன:
தமிழகத்திற்குள் வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை செய்யப்பட்ட பயணிகளைத் தொடர்ந்து கண்காணித்து கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் இருக்கும் சர்வேதேச விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிர படுத்த முடிவு செய்துள்ளனர்.
கொரோனாவை தடுக்க இன்று இந்திய அளவில் எடுக்கப்பட்ட முயற்சிகள்:
தாஜ்மகாலுக்கு செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனைக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மக்களவைக்குள் இனி எல்லோரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் வலியுறுத்தி இருக்கிறார்.
மேலும், மக்கள் முகக்கவசம் அணிவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதார துறை அமைச்சர் இன்று மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.