Page Loader
தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவு
தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவு

எழுதியவர் Nivetha P
Feb 06, 2023
05:33 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் கடந்தமாதமும் இம்மாதம் முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்தன. இதனால் பாதிப்படைந்த டெல்டாமாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களுக்கு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர், உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர், மூத்த அதிகாரிகள் ஆகியோரை நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுடன் குறைகளை கேட்டறியுமாறு தமிழக முதல்வர் அண்மையில் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் மழையால் பாதிப்படைந்த அறுவடை செய்யப்பட்ட நெற்களை நேரடி கொள்முதல் செய்திடும் போது விவசாயிகள் நலன் கருதி, 22 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய உரிய தளர்வுகளை வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு நேற்று(பிப்.,5) கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக முதல்வர்

ஹெக்டேருக்கு ரூ.20,000 வரை இழப்பீடு-உத்தரவு பிறப்பிப்பு

இதனைதொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் அமைச்சர்கள் குழுவுடன் ஆலோசனைநடத்திய தமிழக முதல்வர், விவசாயிகள் நலனை கருத்தில்கொண்டு நிவாரணம் வழங்க முடிவுசெய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் வழங்கியுள்ள நிவாரண தொகுப்பின்படி, கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்சேத கணக்கெடுப்பு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும். பேரிடர் மேலாண்மை விதிகள்படி, 33சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டிருந்தால் ஹெக்டேருக்கு ரூ.20,000வரை வழங்கப்படும். நெல்அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமுற்ற இளம்பயிறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ.3000 வழங்கப்படும். உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் விவசாயம் செய்ய 50சதவிகிதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8கிலோ பயறு விதைகள் வழங்கப்படும். டெல்டா மாவட்டங்களில் உடனே அறுவடை மேற்கொள்ள 50சதவிகிதம் மானியத்தில் நெல்அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.