தமிழக பட்ஜெட் 2023-24 : சென்னைக்கான முக்கிய அறிவிப்புகள்
தமிழ்நாடு சட்டசபையில் 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் இன்று(மார்ச்.,20) தாக்கல் செய்யப்பட்டது. இதில் சென்னை மாநகருக்கான முக்கிய அறிவிப்புகள் வருமாறு, சென்னை தீவுத்திடலில் ரூ.50 கோடி செலவில் 30 ஏக்கர் நிலப்பரப்பளவில் நகர்ப்புற பொதுச்சங்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி தியேட்டர் உள்ளிட்டவை அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்படும். வடசென்னை வளர்ச்சி திட்டம் ரூ.1000 கோடி செலவில் அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். அடையாறு ஆற்றில் 44 கிமீ., தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், அதன் கரைகளில் பொழுதுபோக்கு மையங்கள், பூங்கா உள்ளிட்டவை தனியார் நிறுவன பங்களிப்போடு அமைக்கப்படும்.
ரூ.1600 கோடி மதிப்பீட்டில் பேருந்து பணிமனைகள் மேம்பாடு
அடையாறு கூவம் ஆற்று பகுதிகளை சீரமைக்க ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதிகளில் ரூ.20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடர்ந்து, வரும் காலங்களில் வெள்ளம், கனமழையை எதிர்கொள்ளவும், கட்டமைப்பை வலுப்படுத்தவும் ரூ.320 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் 4 வழி சாலையாக மேம்பாலம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இது குறித்து சர்வதேச நிபுணர்களிடம் கருத்து பெறப்பட்டு நவீன அம்சங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள பேருந்து பணிமனைகள் ரூ.1600கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.