தாஜ்மகாலுக்கு 1 கோடிக்கு மேல் வரி விதித்த மாநகராட்சி!
செய்தி முன்னோட்டம்
தாஜ்மகாலுக்கு நிலுவையில் உள்ள வரிகளைக் கட்ட கோரி இந்திய தொல்லியல் துறைக்கு, ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2021- 22 மற்றும் 2022-23ஆம் நிதியாண்டுகளுக்கான சொத்து வரி மற்றும் குடிநீர் வரி நிலுவையில் உள்ளது என்றும் அதை 15 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்றும் ஆக்ரா மாநகராட்சி இந்த அறிவிப்பை அனுப்பி இருக்கிறது.
தாஜ்மஹாலுக்கு சொத்துவரி ரூ. 1.5 லட்சமும் குடிநீர் வரி ரூ.1.9 கோடியும் விதிக்கப்பட்டள்ளது.
இந்த வரிகளை 15 நாட்களுக்குள் கட்டவில்லை என்றால் தாஜ்மஹாலுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரி நிலுவை
குழப்பத்தில் இந்திய தொல்லியல் துறை!
இதனையடுத்து, நினைவு சின்னங்களுக்கு வரி வசூலிக்கப்படாது என்றும் வணிகரீதியாகப் பயன்படுத்தாத நீருக்கு வரிகள் கிடையாது என்றும் இந்திய தொல்லியல் கண்காணிப்பு ஆய்வாளர் ராஜ்குமார் படேல் தெரிவித்துள்ளார்.
மேலும், "முதல் முறையாக இது போன்ற வரிகள் விதிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை, தவறாக இந்த நோட்டிஸ் அனுப்பப்பட்டிருக்கலாம்" என்றும் அவர் கூறி இருக்கிறார்.
இது குறித்து பேசிய நகராட்சி ஆணையர் நிகில் டிஃபண்டே, "ஆக்ரா முழுவதும் கணக்கெடுப்பின் அடிப்படையில் அரசு கட்டிடங்கள், மத வழிபாட்டு தலங்கள் போன்ற அனைத்து கட்டிடங்களுக்கும் நிலுவையில் உள்ள வரிகள் வசூலிக்கப்பட வேண்டும் என்று புவியியல் தகவல் அமைப்பு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதன் அடிப்படையில் இந்த நோட்டிஸ் அனுப்பப்பட்டிருக்கலாம்" என்று கூறியுள்ளார்.