Loading...
மன்மோகன் சிங் தற்கொலை செய்துகொள்வேன் என்றார்: முன்னாள் தேர்தல் அதிகாரி எஸ்.ஒய்.குரேஷி புத்தகத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்
மன்மோகன் சிங்குடன் நடைபெற்ற உருக்கமான சந்திப்பு குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார் எஸ்.ஒய். குரேஷி

மன்மோகன் சிங் தற்கொலை செய்துகொள்வேன் என்றார்: முன்னாள் தேர்தல் அதிகாரி எஸ்.ஒய்.குரேஷி புத்தகத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 13, 2026
01:45 pm

செய்தி முன்னோட்டம்

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி எழுதியுள்ள "இந்தியா அண்ட் ஐ: எ ஹண்ட்ரட் மெமரீஸ், நாட் அ மெமோயர்" என்ற புதிய புத்தகத்தில், கடந்த 2012-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடைபெற்ற உருக்கமான சந்திப்பு குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். 2012-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின் போது, அப்போதைய மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டை 4.5%லிருந்து 9%மாக உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது என்ற விதியின் கீழ், BJP உடனடியாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.

விமர்சனம்

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான விமர்சனமும் குரேஷியின் கோபமும்

இருதரப்பு வாதங்களையும் நான்கு நாட்கள் கேட்ட தேர்தல் ஆணையம், விதிகளின்படி எடுக்கக்கூடிய மிகக் கடுமையான நடவடிக்கையான கண்டனத்தை சல்மான் குர்ஷித் மீது பதிவு செய்தது.

இந்த நடவடிக்கையால் அதிருப்தியடைந்த சில காங்கிரஸ் தலைவர்கள், தேர்தல் ஆணையம் தன்னிச்சையாகவும், ஆணவத்துடனும் செயல்படுவதாக பகிரங்கமாக விமர்சிக்கத் தொடங்கினர்.

இது குறித்து புத்தகத்தில் எழுதியுள்ள குரேஷி, "விமர்சனங்கள் என்னை ஒருபோதும் பாதிப்பதில்லை; ஆனால் ஒரு பொது நிறுவனத்தின் நம்பகத்தன்மையை குலைக்கும் வகையிலான இத்தகைய தளர்வான பேச்சுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாகத் தனது கவலையை பிரதமரின் ஊடகச் செயலாளராக இருந்த ஹரிஷ் காரேவிடம் குரேஷி தெரிவித்தார்.

இதனை அவர் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லலாமா என்று கேட்க, குரேஷியும் அதற்கு சம்மதித்தார்.

மன்மோகன் சிங்

"நான் தற்கொலை செய்துகொள்வேன்": மன்மோகன் சிங்கின் உருக்கமான வார்த்தைகள்

மறுநாளே, பிரதமரின் பிரத்யேக தொலைபேசியில் இருந்து குரேஷிக்கு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், மிகவும் பதற்றமான குரலில்,"குரேஷி ஜி, நான் உங்களை அவசரமாகச் சந்திக்கலாமா?" என்று கேட்டுள்ளார்.

பிரதமரின் குரலில் இருந்த பதற்றத்தைக் கண்டு, குரேஷி அன்று மாலை அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார்.

அச்சந்திப்பு குறித்து குரேஷி விவரிக்கையில்,"பிரதமர் மன்மோகன் சிங் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார்.

அவர் என்னைப் பார்த்ததும், 'ஹரிஷ் நீங்கள் சொன்னதை என்னிடம் கூறினார். நீங்கள் அப்படி (தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து) நினைத்தால், நான் தற்கொலை செய்து கொள்வேன்' என்றார். எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை, நான் சில அமைச்சர்களின் நடத்தை குறித்துத்தான் கூறினேனே தவிர, அவரைப் பற்றி அல்ல என்று கூறினேன்."

ADVERTISEMENT

உருக்கம்

"தேர்தல் ஆணையம் இந்தியாவின் பெருமை"

மன்மோகன் சிங்கை சமாதானப்படுத்த குரேஷிக்கு சில நிமிடங்கள் ஆகியுள்ளது.

பின்னர் நிலைமையைப் புரிந்து கொண்ட மன்மோகன் சிங், "எனக்கு இது குறித்து எதுவும் தெரியாது; தெரிந்திருந்தால் அவர்களைக் கடுமையாகக் கண்டித்திருப்பேன். இனி எப்போது என்ன பிரச்னை என்றாலும் நேரடியாக என்னை அழையுங்கள்".

"தேர்தல் ஆணையம் இந்தியாவின் பெருமை மட்டுமல்ல, அது நமது ஜனநாயகத்தின் ஆன்மா. அதை நாம் இழந்துவிட்டால், எல்லாவற்றையும் இழந்துவிடுவோம்" என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

புகழாரம்

"அதிகார பாரத்தை உணர்ந்த தலைவர்"

இந்தச் சந்திப்பிற்கு பிறகு, தேர்தல் ஆணையத்திற்கு எதிரான காங்கிரஸ் அமைச்சர்களின் விமர்சனங்கள் முற்றிலுமாக நின்றன.

இந்த நிகழ்வை நினைவுகூர்ந்துள்ள குரேஷி, "என் வாழ்வில் பல சக்திவாய்ந்த மனிதர்களைச் சந்தித்துள்ளேன். ஆனால், அதிகாரத்தைத் மிக எளிதாகக் கையாண்ட, அதே நேரத்தில் அதன் பொறுப்பை இவ்வளவு ஆழமாக உணர்ந்த சிலரையே கண்டுள்ளேன்".

"தடித்த தோல் கொண்டவர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் இந்த அரசியல் துறையில், அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் அரிய உணர்திறன் கொண்ட ஒருவராக டாக்டர் மன்மோகன் சிங் தனித்து நின்றார்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT