டெல்லி விமான நிலையத்தில் பதற்றம்: சுவிஸ் ஏர் விமான என்ஜினில் தீ - 6 பயணிகள் காயம்
செய்தி முன்னோட்டம்
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சூரிச் நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த சுவிஸ் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் A330 விமானம், ரன்வேயில் சென்றுகொண்டிருந்தபோது என்ஜினில் கோளாறு ஏற்பட்டுத் தீப்பிடித்தது. இந்த விபத்தில் சிக்கிய ஆறு பயணிகள் காயமடைந்துள்ள நிலையில், உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
சம்பவம்
நடந்தது என்ன?
விமானம் LX147 ரன்வேயில் புறப்படுவதற்குத் தயாரானபோது, அதிகாலை 1:08 மணியளவில் என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுத் தீப்பிடித்தது. இதைக் கவனித்த விமானி, உடனடியாகப் புறப்படுதலை நிறுத்தி பயணிகளை அவசரமாக வெளியேற்ற முடிவு செய்தார். அவசரக்கால சறுக்கு வழுக்கிகள் மூலம் பயணிகள் அனைவரும் ரன்வேயிலேயே பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். சறுக்கிக் கீழே இறங்க முடியாத பயணிகளுக்கு ஏணிகள் வழங்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அறிக்கை
விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கை
இந்தச் சம்பவம் குறித்து சுவிஸ் ஏர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "விமானத்தில் 228 பயணிகள் மற்றும் நான்கு குழந்தைகள் இருந்தனர். என்ஜின் கோளாறு ஏற்பட்டவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். விமானக் குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர், காயமடைந்த ஆறு பயணிகளுக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்குத் தேவையான ஹோட்டல் தங்குமிடம் மற்றும் மாற்று விமான ஏற்பாடுகளைச் செய்ய உள்ளூர் குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
விசாரணை
விசாரணை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய சுவிஸ் ஏர் நிறுவனம் ஒரு சிறப்புப் பணிக்குழுவை அமைத்துள்ளது. நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் டெல்லிக்கு விரைந்து, விமானத்தை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். "பயணிகள் மற்றும் விமானக் குழுவினரின் பாதுகாப்பே எங்களின் முதல் முன்னுரிமை" என்று நிறுவனம் உறுதிபடத் தெரிவித்துள்ளது. இத்தகைய விபத்துகள் விமானப் பயணிகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகின்றன.