நிலைமை கவலைக்கிடம்; டெல்லி காற்று மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை
செய்தி முன்னோட்டம்
டெல்லி தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் காற்றுத் தரக் குறியீடு (AQI) மிகவும் மோசமான பிரிவில் நீடிப்பதால், உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (நவம்பர் 13) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. "நிலைமை மிகக் கவலைக்கிடமாக உள்ளது. குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மாஸ்குகள் போதுமானதல்ல" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மன் மற்றும் ஏ.எஸ்.சந்தூர்க்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரித்தபோது, வழக்கறிஞர்கள் அனைவரும் நேரில் ஆஜராவதற்குக் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியது. "நீங்கள் ஏன் அனைவரும் இங்கு வந்துள்ளீர்கள்? எங்களிடம் காணொலி மூலம் விசாரணை செய்யும் வசதி உள்ளது. இதைப் பயன்படுத்துங்கள். இந்தக் காற்று மாசுபாடு நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தும்." என்று நீதிபதி நரசிம்மன் தெரிவித்தார்.
திட்டம்
படிப்படியான பங்களிப்பு செயல் திட்டம்
தலைநகரில் பல பகுதிகளில் இன்று காலை AQI அளவு 400ஐத் தாண்டியது. இதனால், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தப் படிப்படியான பதிலளிப்பு செயல் திட்டத்தின் (GRAP) மூன்றாம் கட்டக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இந்தக் கட்டுப்பாடுகளில் அத்தியாவசியமற்ற கட்டுமான நடவடிக்கைகளுக்குத் தடை, பிஎஸ்-III மற்றும் பிஎஸ்-IV டீசல் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு மற்றும் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஆகியவை அடங்கும். இந்தக் காலகட்டத்தில் காற்று மாசுபாட்டிற்கு முக்கியக் காரணமாக இருக்கும் பயிர்க் கழிவுகளை எரிப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை மீண்டும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.