உச்சநீதிமன்றத்தில் இனி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 'ஆன்லைன்' விசாரணை: ஏன் இந்த அதிரடி மாற்றம்?
செய்தி முன்னோட்டம்
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்திய உச்சநீதிமன்றம் தனது செயல்பாடுகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இனி வாரத்தின் இரண்டு நாட்கள் (திங்கள் மற்றும் வெள்ளி) முழுமையாக காணொளி வாயிலாக (Virtual Hearings) விசாரணைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விடுத்த சிக்கன நடவடிக்கை மற்றும் எரிபொருள் சேமிப்பு கோரிக்கையை ஏற்று, உச்சநீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது. புதிய விசாரணை நடைமுறையின்படி: திங்கள் & வெள்ளி: முழுமையான காணொளி காட்சி விசாரணை. செவ்வாய் முதல் வியாழன் வரை: கலப்பு முறை (Hybrid System) - வழக்கறிஞர்கள் நேரிடையாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ ஆஜராகலாம்.
கார் பூலிங்
நீதிபதிகளின் கார் பூலிங் முடிவு
விசாரணை முறையில் மாற்றம் செய்வது மட்டுமின்றி, எரிபொருள் நுகர்வைக் குறைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமனதாக ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளனர். இதன்படி, நீதிபதிகள் அனைவரும் 'கார் பூலிங்' முறையைப் பின்பற்றி, வாகனங்களை பகிர்ந்து பயணிக்க முடிவு செய்துள்ளனர். இது நிறுவன ரீதியாக எரிபொருள் சேமிப்பிற்கு ஒரு முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது. நீதிமன்றப் பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க, பதிவாளர் அலுவலக (Registry) ஊழியர்களுக்குப் பகுதிநேர வீட்டிலிருந்தே வேலை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 50 சதவீத ஊழியர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம். பணி சுமை மற்றும் அவசியத்தை பொறுத்து இந்த முறையில் மாற்றங்கள் செய்ய அதிகாரிகளுக்கு நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட்டுள்ளது.
எரிசக்தி
மேற்கு ஆசியப் போரும் எரிசக்தி நெருக்கடியும்
உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைப் பாதித்துள்ளது. இதனால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து வருவதால், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், எரிபொருளைச் சேமிக்கவும் பல்வேறு துறையினர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், நீதித்துறை இந்த ஆலோசனையை ஏற்றுத் தனது செயல்பாடுகளை மாற்றியமைத்த முதல் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது.