அரசு நிறுவனங்களில் தெருநாய்களுக்கு ஆதரவளிக்கும் ஊழியர்கள்; நவம்பர் 7 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்குவதாக அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
நாடு முழுவதும் அதிகரித்து வரும் தெருநாய்கள் பிரச்னை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. குறிப்பாக, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஊழியர்கள் தெருநாய்களுக்கு உணவளித்து ஆதரவு கொடுப்பதால் ஏற்படும் சிக்கல்களைத் தடுப்பது குறித்து முக்கிய உத்தரவுகளை அடுத்த வாரம் பிறப்பிக்கப்போவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, தெருநாய்களின் எண்ணிக்கை, கடித்த சம்பவங்கள், கருத்தடை மற்றும் தடுப்பூசி புள்ளிவிவரங்கள், தங்குமிடங்கள் போன்ற விவரங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து பெற்ற பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் விரிவான அறிக்கையாகத் தொகுக்க, நீதிமன்றத்திற்கு உதவும் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது.
விலங்கு நல வாரியம்
விலங்கு நல வாரியத்தையும் ஒரு கட்சியாக சேர்ப்பு
நீதிமன்ற அமர்வு தனது உத்தரவில், "பிரமாணப் பத்திரங்களைப் பதிவு செய்வது மட்டுமின்றி, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஊழியர்கள் நாய்களை ஆதரித்து உணவு வழங்குவதால் உருவாகும் நிறுவன ரீதியான தொல்லைகளைக் குறித்து உறுதியான உத்தரவுகளைப் பிறப்பிப்போம்." என்று குறிப்பிட்டது. மேலும், விலங்குகள் நல வாரியத்தையும் இந்த வழக்கில் ஒரு கட்சியாகச் சேர்க்க உத்தரவிட்டது. முன்னதாக, அக்டோபர் 27இல், தெருநாய்க் கடி சம்பவங்கள் அதிகரிப்பது குறித்துக் கடும் அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், முந்தைய உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாததால், விடுபட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களை நவம்பர் 3இல் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இப்போது, அடுத்த உத்தரவுகளுக்கு இணங்கத் தவறினாலொழிய, தலைமைச் செயலாளர்கள் இனி நேரில் ஆஜராகத் தேவையில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.