LOADING...
"இலவசங்கள் வரி செலுத்துவோர் தலையில் விழும் இடி!": தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி
தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி

"இலவசங்கள் வரி செலுத்துவோர் தலையில் விழும் இடி!": தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி

எழுதியவர் Venkatalakshmi V
Feb 19, 2026
03:00 pm

செய்தி முன்னோட்டம்

தேர்தல் நேரங்களில் அறிவிக்கப்படும் "பொறுப்பற்ற" இலவசத் திட்டங்கள் பொது நிதியை சீர்குலைப்பதாக தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இது குறித்து மாநில அரசுகளுக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, தமிழக மின்சார வாரியம் (TANGEDCO) தாக்கல் செய்த மனுவை விசாரித்த போது, இலவச மின்சார அறிவிப்புகள் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்த முக்கிய கருத்துக்கள் தமிழக அரசை கேள்வி கேட்கும் வகையில் உள்ளது.

கேள்விகள்

உச்ச நீதிமன்றத்தின் காரசாரக் கேள்விகள்

"அரசு தொடர்ந்து இலவசப் பணம், மின்சாரம் மற்றும் இதர வசதிகளை வழங்கினால், இறுதியில் அதன் சுமையை யார் சுமப்பார்கள்? இந்தச் சுமை வரி செலுத்தும் சாமானிய மக்கள் மீதே விழும்." "நேரடி பண பரிமாற்றம் போன்ற திட்டங்களை அறிவித்தால், மக்கள் இனி வேலைக்கு செல்வார்களா? இது நாட்டின் பணி கலாச்சாரத்தையே அழித்துவிடும்." "தேர்தலுக்குச் சற்று முன்னதாக ஏன் இதுபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன? அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகவியலாளர்களும் இது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என நீதிபதிகள் தொடர் கேள்விகளை அடுக்கினர்.

கேள்வி

தமிழக அரசிற்குச் சரமாரி கேள்வி

மின்சாரக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்ட பிறகு, கடைசி நேரத்தில் இலவச மின்சாரத் திட்டத்தை அறிவித்தது ஏன் என்று தமிழக அரசிற்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. "திட்டமிடப்படாத இத்தகைய அறிவிப்புகளால் மின் விநியோக நிறுவனங்கள் (DISCOMs) நிதி ரீதியாக நிலைகுலைகின்றன. நிலப்பிரபுக்களாக இருப்பவர்கள் கூட இலவச மின்சாரம் என்பதால் மின்விளக்குகளையும், இயந்திரங்களையும் அணைக்காமல் விட்டுவிடுகிறார்கள். இது யாருடைய பணம்?" என நீதிபதிகள் வினவினர். பெரும்பாலான மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையில் இருக்கும்போது, இத்தகைய "தாராளமயமான" விநியோகங்கள் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை முடக்கும் என்றும், இலவசங்களுக்குப் பதிலாக வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசுகள் முயல வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement