LOADING...
ஆரவல்லி மலைத்தொடர் வரையறை: மத்திய அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
மத்திய அரசு விரிவான விளக்கங்களை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

ஆரவல்லி மலைத்தொடர் வரையறை: மத்திய அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

எழுதியவர் Venkatalakshmi V
Dec 29, 2025
01:45 pm

செய்தி முன்னோட்டம்

ஆரவல்லி மலைத்தொடரின் எல்லைகளை வரையறுத்து மத்திய அரசு அண்மையில் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 29) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு விரிவான விளக்கங்களை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களில் பரவியுள்ள ஆரவல்லி மலைத்தொடரின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் எவை என்பது குறித்த புதிய வரையறையை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இந்த வரையறை சுரங்கத் தொழில் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குச் சாதகமாக இருப்பதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குறைப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

நீதிமன்றத்தின் தலையீடு

மத்திய அரசின் புதிய வரையறைக்குத் தடை விதித்த நீதிமன்றம்

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் புதிய வரையறைக்குத் தடை விதித்தது. இந்த வரையறையால் சூழலியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நீதிமன்றம் கவலை தெரிவித்தது. ஆரவல்லி மலைத்தொடரின் எந்தெந்த பகுதிகள் 'காடுகள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் எந்த அடிப்படையில் புதிய வரையறை உருவாக்கப்பட்டது என்பது குறித்து தெளிவான விளக்கங்களை அளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முக்கியத்துவம்

ஆரவல்லி மலைத்தொடரின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

ஆரவல்லி மலைத்தொடர் இந்தியாவின் மிகப்பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாகும். இது பாலைவன விரிவாக்கத்தைத் தடுப்பதிலும், நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தடை உத்தரவு, இப்பகுதிகளில் சட்டவிரோத சுரங்கப் பணிகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அடுத்தகட்ட விசாரணை வரும் வரை, மத்திய அரசின் அந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வராது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisement