பிரிவு 19: உரிமைகளை தனிநபர்களுக்கு எதிராகவும் செயல்படுத்தப்படலாம்!
அடிப்படை உரிமைகள் சட்டப்பிரிவு 19 மற்றும் 21ஐ தனிநபர் மற்றும் நிறுவங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளைத் தவிர அடிப்படை உரிமைகள் சட்டப்பிரிவு 19 மற்றும் 21ஐ தனிநபர் மற்றும் தனியார் நிறுவங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. "இந்த உரிமைகளை அரசுக்கு எதிராக மட்டுமே செயல்படுத்த முடியும் என்ற நிலைமை காலப்போக்கில் மாறிவிட்டது." என்று நீதிபதி ராமசுப்ரமணியன் தான் எழுதிய தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். "ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக 21வது சட்டப்பிரிவின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது." என்றும் இந்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறி இருக்கிறது.
இந்த அமர்வில் உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் பிற தீர்ப்புகள்:
அமைச்சர்கள் கூறும் கருத்துகளுக்கு அரசு பொறுப்பேற்காது. சட்டப்பிரிவு 19(1)(a)க்கு கீழ் கூறப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துரிமை அனைவருக்கும் பொருந்தும். இந்த உரிமைகளை சட்டப்பிரிவு 19(2)இல் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அமைச்சர்கள், சட்டமன்றத்திற்கு/அமைச்சரவைக்கு வெளியே பேசும் கருத்துக்களைக் கூட்டு பொறுப்பாக கருத முடியாது. "ஆனால், ஒருவேளை அந்த அமைச்சரின் பேச்சு அரசாங்கத்தின் கருத்துக்களையும் உள்ளடக்கி இருந்தால் அதை கூட்டு பொறுப்பாக கருதலாம்." என்று நீதிபதி பி.வி நாகரத்னா தனது தனி தீர்ப்பில் கூறி இருகிறார். அமைச்சர்கள், இரண்டு விதமான கருத்துக்களை வெளியிடலாம். 1. தனிப்பட்ட கருத்துக்கள் 2. அரசாங்க பிரதிநிதி என்ற முறையில் வெளியிடும் அதிகாரபூர்வ கருத்துக்கள். இதில் முதல் நிலை கருத்துக்களுக்கு அரசாங்கம் பொறுப்பாகாது.