Loading...
சமூக வலைதளங்களில் சிறுவர்களுக்கு தடை? உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு
சட்டப்பூர்வ விதிகளை உடனடியாக வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சமூக வலைதளங்களில் சிறுவர்களுக்கு தடை? உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 29, 2026
08:02 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தன்னிச்சையாக சமூக வலைதள கணக்குகளை தொடங்குவதைத் தடுக்கும் வகையில், சட்டப்பூர்வ விதிகளை உடனடியாக வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, 'ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ட்ரன் அலையன்ஸ்' என்ற அமைப்பு தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்தபோது இக்கருத்துகளைத் தெரிவித்தது. சமூக வலைதளக் கணக்குகளை தொடங்குவதற்கு ஏற்றுக்கொள்ளப்படும் விதிகள் ஒரு சட்டப்பூர்வ ஒப்பந்தத்திற்குச் சமமானது. 1872-ஆம் ஆண்டைய இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் பிரிவு 11-ன் படி, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் செய்யும் ஒப்பந்தங்கள் செல்லாது. எனவே, 13 வயதுடைய சிறுவர்கள் சுயமாக கணக்குத் தொடங்க அனுமதிக்கப்படுவது சட்டத்திற்குப் புறம்பானது என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆபத்து

ஆபத்துகளும் மத்திய அரசின் பதிலும்

சிறுவர்கள் இணையத்தில் எளிதாக கணக்கு தொடங்குவதால் பாலியல் சுரண்டல், சைபர் புல்லியிங் மற்றும் தரவு திருட்டு போன்ற ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இது தொடர்பாக இடைநிலை விதிகளின் கீழ் விரைவில் சட்டப்பூர்வக் கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இத்திட்டம் சிறுவர்களுக்கு இணையத்தைப் பயன்படுத்த முழு தடை விதிக்காமல், பெற்றோர் அல்லது காப்பாளரின் அனுமதியை மட்டுமே கட்டாயமாக்குகிறது.

ADVERTISEMENT