தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் நடிகர் ரஜினிகாந்த்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி கடந்த மாதம் 28ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை' என்னும் தலைப்பில் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த புகைப்பட கண்காட்சியினை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், திரைப்பட துறையினை சார்ந்தோர், பொதுமக்கள் என அனைவரும் பார்வையிட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த புகைப்பட கண்காட்சியினை இன்று(மார்ச்.,11) நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பார்வையிட்டார். அவருடன் இணைந்து நடிகர் யோகிபாபு, அமைச்சர் சேகர்பாபு ஆகியோரும் பார்வையிட்டார்கள்.
கடின உழைப்புக்கு பின்னரே முதல்வர் இந்த இடத்திற்கு வந்துள்ளார் - ரஜினிகாந்த்
இதனை தொடர்ந்து அங்கிருந்த கருத்து தெரிவிக்கும் புத்தகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். 'அருமையான சேகரிப்பு, என்ன ஒரு நினைவுகள்' என்று எழுதினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் அவர்கள் இந்த புகைப்பட கண்காட்சி குறித்த தனது கருத்தினை கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த புகைப்பட கண்காட்சி மிக அற்புதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் வாழ்க்கை பயணம், அரசியல் பயணம் இரண்டுமே ஒன்று தான். அவர் பல்வேறு பதவிகளை வகித்து, தனது கடுமையான உழைப்பிற்கு பிறகே இந்த இடத்திற்கு வந்துள்ளார். அவரை தமிழக முதல்வராக தேர்ந்தெடுத்தது தமிழக மக்கள் அவருக்கு கொடுத்த அங்கீகாரம் ஆகும் என்று கூறியுள்ளார்.