
மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தியை மிரட்டிய சைபர் கிரைம் கும்பல்; காவல்துறையிடம் புகார்
செய்தி முன்னோட்டம்
மாநிலங்களவை உறுப்பினரும், சமூக சேவகருமான சுதா மூர்த்தி, ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலால் குறிவைக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி பெங்களூர் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையிடம் அவர் அளித்த புகாரின்படி, செப்டம்பர் 5 ஆம் தேதி அவருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அழைத்த எண் ட்ரூகாலர் செயலியில் தொலைத்தொடர்புத் துறையிலிருந்து வருவதாகக் காட்டியுள்ளது. அந்தப் பெண், தன்னை தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் ஊழியர் என்று கூறிக்கொண்டு, சுதா மூர்த்தியின் மொபைல் எண் ஜனவரி 2020 முதல் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், அந்த எண்ணைப் பயன்படுத்தி ஆபாசமான வீடியோக்களைப் பார்த்ததாகவும், பகிர்ந்ததாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
மொபைல் சேவை
மொபைல் சேவை துண்டிக்கப்படும் என மிரட்டல்
தொடர்ந்து, அன்றைய தினமே மதியம் 12 மணிக்குள் அவரது மொபைல் சேவை துண்டிக்கப்படும் என்று மிரட்டியுள்ளார். சுதா மூர்த்தி தனது தனிப்பட்ட தகவல்களை வழங்க மறுத்தபோது, அழைத்தவர் அவதூறாகப் பேசியதோடு, மிரட்டல்களையும் விடுத்துள்ளார். இதையடுத்து, இது குறித்து பெங்களூர் சைபர் கிரைம் காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது தனிப்பட்ட தகவல்களை மோசடியாகப் பெற முயன்றதற்காகவும், மிரட்டல் விடுத்ததற்காகவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுதா மூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சம்பவம், உயர் பதவியில் உள்ளவர்களையும் குறிவைக்கும் சைபர் மோசடி கும்பல்களின் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டுகிறது.