4 ஆண்டு ஹானர்ஸ் பட்டம் அறிமுகம்: இளங்கலையில் அதிரடி மாற்றங்கள்!
இளங்கலைப் படிப்புகளில் தேசிய கல்வி திட்டத்தின் கீழ் அதிரடி மாற்றங்களை பல்கலைக் கழக மானிய குழு அறிவித்துள்ளது. அனைத்து இளங்கலையிலும் 4 ஆண்டுகள் ஹானர்ஸ் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த படிப்பில் 160 மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களுக்கு ஹானர்ஸ்/ஆராய்ச்சியுடன் கூடிய ஹானர்ஸ் பட்டம் வழங்கப்படும். இது தொடர்பாக பல்கலைக் கழக மானிய குழு அறிக்கையில் முக்கியமாகக் கூறப்பட்டிருந்த மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்:
முதல் 6 செமஸ்டர்களில் 75 சதவீதத்திற்கு மேல் எடுத்திருக்கும் மாணவர்கள் ஆய்வு படிப்பை மேற்கொள்ள ஆசைப்பட்டால் 4ஆவது ஆண்டில் சேரலாம். முதல் ஆண்டில் 40 மதிப்பெண்களுடன் படிப்பைப் பாதியில் நிறுத்துவோர் ஏதாவது ஒரு கோடைகால தொழிற்கல்வி படிப்பை 4 மதிப்பெண்களுடன் முடித்திருந்தால், அவர்கள் 3 ஆண்டிற்குள் மீண்டும் சேர்ந்து படிப்பைத் தொடரலாம். இதே போல், இரண்டாம் ஆண்டில் படிப்பைப் பாதியில் நிறுத்துகிறார்கள் என்றால் அவர்கள் 80 மதிப்பெண்கள் மற்றும் 4 மதிப்பெண்களுடன் ஒரு கோடைகால தொழிற்கல்வி படிப்பை முடித்திருக்க வேண்டும். அப்படி முடித்திருந்தால், அவர்கள் 3 ஆண்டிற்குள் மீண்டும் சேர்ந்து படிப்பைத் தொடரலாம். ஆனால், இவர்கள் 7 ஆண்டிற்குள் படிப்பை முடித்திருக்க வேண்டும்.