தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர்
தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த வேல்முருகன்(42) என்பவரது பைபர் படகில் பாலசுப்ரமணியன்(40), அருண்குமார்(26), மாதவன்(36), கார்த்திக்(32), முருகன்(54) ஆகிய 6 பேரும் கடந்த 21ம்தேதி தரங்கம்பாடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்கள். நேற்று(பிப்.,23) அதிகாலை 4.30மணியளவில் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இரும்பு குழாய்களை கொண்டு தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கியுள்ளார்கள். தொடர்ந்து அவர்களின் மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ்.கருவி, பேட்டரி உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் நடத்திய தாக்குதலில் 6பேருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளதோடு, ஒருவருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. தரங்கம்பாடி மருத்துவமனையில் இவர்கள் சிகிச்சைபெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
உயர்மட்ட அளவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த சம்பவம் குறித்து மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் குழுமபோலீசாரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். அதன்படி, இலங்கை கடற்படையினர் மீது கூட்டுக்கொள்ளை, கொடூரமாக தாக்குதல், அத்துமீறி நுழைந்து திருடுதல் உள்ளிட்ட 3பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவு துறையமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில் அவர் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்தாக்குதல் நடத்துவதை கண்டித்தும், இதற்கு நிரந்தர தீர்வுகாணவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து இலங்கை அரசிடம் வலுவாக எடுத்து சென்று, இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலை தவிர்க்க உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த தூதரக வழிமுறைகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.