விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டியில் சிறப்பு மலை ரயில் இயக்கம்
விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணத்திற்காக ஊட்டி மலையில் சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்கி வருகிறது. பொதுவாகவே மேட்டுப்பாளையம் - குன்னூர் - ஊட்டி இடையேயான மலை ரயிலில் பயணிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே அதிக ஆர்வம் இருக்கும். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை (செப்டம்பர் 7) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்டம்பர் 8) மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, குன்னூரில் இருந்து ஊட்டி வரை இரண்டு நாட்களும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் குடும்பத்துடன் இயற்கை காட்சிகளை கண்டுகளித்துக் கொண்டே பயணிக்கலாம்.
ஓணம் பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள்
விநாயகர் சதுர்த்திக்குப் பிறகு கேரளாவில் விமரிசையாக கொண்டாடப்படும் ஓணம் திருவிழா வர உள்ளது. இதையொட்டி செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளிலும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் ஊட்டியிலிருந்து மேலே குறிப்பிட்ட தினங்களில் குன்னூருக்கு ஒரு முறையும், ஊட்டியிலிருந்து கேத்திக்கு மூன்று முறையும் இயக்கப்பட உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது உள்ளூர் மக்களுக்கும் பலனளிக்கும் என்பதால் அவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையே சனிக்கிழமையான இன்று பலரும் இந்த சிறப்பு மலை ரயிலை பயன்படுத்தி பயணம் செய்தனர்.