LOADING...
பயணிகள் வருவாயில் தெற்கு ரயில்வே முதலிடம் - புதிய திட்டங்கள் அறிவிப்பு
பயணிகள் வருவாயில் தெற்கு ரயில்வே முதலிடம்

பயணிகள் வருவாயில் தெற்கு ரயில்வே முதலிடம் - புதிய திட்டங்கள் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 24, 2025
08:54 am

செய்தி முன்னோட்டம்

தெற்கு ரயில்வே, பயணிகள் கட்டண வருவாயில் நாட்டிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில், $3,273 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 4.71% அதிகம் என்றும் தெற்கு ரயில்வேயின் தலைமை வணிக மேலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். "பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதில் தெற்கு ரயில்வே தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாக, இந்த ஐந்து மாதங்களில் 32 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது, கடந்த ஆண்டை விட 6.58% அதிகமாகும்" என அவர் மேலும் கூறினார்.

புதிய திட்டங்கள்

பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன

பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய, பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. புதிய ரயில் பாதைகள்: சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, பெரம்பூர் - அம்பத்தூர், மற்றும் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே கூடுதல் ரயில் பாதைகள் அமைக்கப்படும். இரட்டைப் பாதை திட்டம்: சேலம்-திண்டுக்கல் இடையே $2,144 கோடி மதிப்பில் இரட்டைப் பாதை பணிகள் மேற்கொள்ளப்படும். ரயில் எண்ணிக்கை அதிகரிப்பு: 2030-க்குள், ரயில்களின் எண்ணிக்கையை 50% அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய வந்தே பாரத் ரயில்கள்: சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. தஞ்சாவூரில் இருந்து மைசூருக்கு 'வந்தே பாரத்' ரயில் சேவை தொடங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. கோவை-சென்னை 'வந்தே பாரத்' ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கப்படும்.

ரயில் நிலையங்கள்

ரயில் நிலையங்கள் மேம்பாடு

தெற்கு ரயில்வே, சென்னையின் நான்காவது முக்கிய ரயில் நிலையமாக பெரம்பூரில் புதிய முனையத்தை அமைக்க முன்மொழிந்துள்ளது. இந்த திட்டத்திற்கு சுமார் ரூ.342 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய முனையம் ரயில்வேயின் பொதுப் பண்டகசாலை நிலத்தில் கட்டப்படும். புதிய பெரம்பூர் முனையம், தற்போது சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் 75% வரை கையாளும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். மறுபுறம், வரலாற்று சிறப்புமிக்க சென்னை எழும்பூர் ரயில் நிலையம், ரூ.734.91 கோடி பட்ஜெட்டில், உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய அமைப்பை பாதுகாத்து, விமான நிலையத்தைப் போன்ற நவீன வசதிகளை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். இந்த பணிகள் 2028-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.