'அப்பாவின் பாதுகாப்பு திட்டமிட்டே விலக்கப்பட்டது': ராகுல், பிரியங்கா உடனான உரையாடலில் சோனியா காந்தி பகிர்ந்த அதிர்ச்சித் தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்துடனேயே அவரது பாதுகாப்பு திட்டமிட்டு விலக்கிக் கொள்ளப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனது வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் நினைவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' (Belonging: A Journey of Love) என்ற புத்தகம் தொடர்பாக, தனது பிள்ளைகள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் நடத்திய மனந்திறந்த உரையாடலில் அவர் இந்த கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு குறித்த ராகுலின் அச்சம்
இந்தக் காணொளி உரையாடலில், ராஜீவ் காந்தி எதிர்க்கட்சி தலைவராக இருந்த காலகட்டத்தில் மேற்கொண்ட சுற்றுப்பயணங்களை சோனியா காந்தி நினைவுகூர்ந்தார்.
திறந்தவெளி ஜீப்பில் பயணம் செய்தபோது அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் குறித்தும், அவரது பாதுகாப்பிற்குப் பொறுப்பானவர்கள் அலட்சியமாக செயல்பட்டதாகவும் சோனியா குற்றம் சாட்டினார்.
அத்தகைய ஒரு சுற்றுப்பயணத்தின் போது தந்தையுடன் சென்ற ராகுல் காந்தி, அங்கு நடந்த கல்வீச்சுச் சம்பவத்தை நேரில் பார்த்து தனது தந்தையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அச்சமடைந்ததை சோனியா விவரித்தார்.
வீட்டிற்குத் திரும்பிய ராகுல், அப்பாவின் பாதுகாப்பு குறித்து உடனடியாக ஏதாவது செய்யாவிட்டால், மிக விரைவில் அவரது இறுதிச் சடங்கிற்காக தான் திரும்பி வர வேண்டியிருக்கும் எனத் தன்னிடம் வேதனையுடன் கூறியதை சோனியா காந்தி உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
திட்டமிட்ட சதி
திட்டமிட்ட சதி என சோனியா மற்றும் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்பது தற்செயலாக நடந்த ஒன்றல்ல என்றும், அது மிகத் தெளிவான திட்டமிட்ட செயல் என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
"அப்பா கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே அவரது பாதுகாப்பு விலக்கப்பட்டது" என அவர் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதே கருத்தை எதிரொலித்த ராகுல் காந்தி, X தளத்தில் பகிர்ந்த காணொளியில், தனது தந்தையின் பாதுகாப்பைத் திரும்பப் பெற்ற முடிவுக்குப் பின்னால் நிச்சயம் ஒரு உள்நோக்கம் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், 500 பக்கங்களுக்கும் மேலாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும், சொல்லப்படாத பல விஷயங்கள் இன்னும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நினைவுகள்
மகிழ்ச்சியும் வலியும் நிறைந்த குடும்ப நினைவுகள்
தாயாருடன் அமர்ந்து பழைய நினைவுகளை அசைபோட்டது குறித்து பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, அந்த உரையாடல் தங்களுக்கு பழைய மகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் அந்த நேரத்தில் தாங்கள் அனுபவித்த ஆழமான வலிகளை மீண்டும் கண்முன்னே கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அன்பும் துயரமும் நிறைந்த தனது தாயாரின் வாழ்க்கை பயணத்தை, அவர் மிகுந்த கண்ணியத்துடனும் துணிச்சலுடனும் எதிர்கொண்ட விதத்தை ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
I wrote Belonging from my memories. Rahul and Priyanka added theirs, and the stories took on a whole new life.
— Sonia Gandhi (@SoniaGandhi) November 24, 2026
My children are my greatest joy, my strength, and the two people who test my patience like nobody else can ☺️ https://t.co/sQKkx7QCae