ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த ஷங்கர் மிஷ்ராவிற்கு ஜாமீன் தர மறுப்பு
கடந்த நவம்பர் 26ம் தேதி நியூயார்க் நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஷங்கர் மிஷ்ரா என்னும் பயணி மது போதையில் 70 வயது மதிக்கத்தக்க சக பயணியான ஓர் பெண்ணின் மீது சிறுநீர் கழித்துள்ளார். இது குறித்து அப்பெண் விமானத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து அப்பெண் டாடா குழும தலைவருக்கு கடிதம் எழுதினார். அதன்பிறகே, 34 வயது கொண்ட ஷங்கர் மிஷ்ரா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதோடு 30 நாட்கள் விமானத்தில் பயணம் செய்ய தடையும் விதிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணைக்கும் தடை
மும்பை மாநிலத்தை சேர்ந்த ஷங்கர் மிஷ்ரா மீது டெல்லி போலீசார் தேடி வந்தனர். இதனையடுத்து, பெங்களூரில் தலைமறைவாக இருந்த அவரை கண்டறிந்த போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்து 6 வாரங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்ற காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஷங்கர் மிஷ்ரா சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கோமல் கார்க் ஷங்கர் மிஷ்ராவை விடுவிப்பது சரியல்ல என்று கூறினார். அதே நேரம், போலீஸ் காவலில் அவரை எடுத்து விசாரிக்க மறுத்த நீதிபதி, நீதிமன்ற காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.