டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை
அதீத கனமழை காரணமாக, டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் கடந்த இரண்டு நாட்களில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது. நேற்று வட இந்தியாவில் நிலவிய மேற்கத்திய இடையூறு காரணமாக, டெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.
40 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பதிவாகி இருக்கும் அதீத கனமழை
டெல்லியின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டெல்லியில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 153 மிமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில், 1982ஆம் ஆண்டுக்கு பிறகு, ஜூலை மாதத்தில் பெய்யும் அதிகபட்ச மழை இதுவாகும். டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும் கனமழை பெய்தது. குருகிராமின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி, மின்சாரம் தடைபட்டது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண்ணும் அவரது ஆறு வயது மகளும் உயிரிழந்தனர். அதே போல, இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வீடு இடிந்து விழுந்ததால் உயிரிழந்தனர்.