
"விஜய் 4 மணிக்கு வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது": கரூர் விபத்து குறித்து செந்தில் பாலாஜி
செய்தி முன்னோட்டம்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு, நடிகர் விஜய்யின் வருகை நேரம் மற்றும் அவரது கட்சி சார்பில் செய்யப்பட்ட அடிப்படை வசதி குறைபாடுகளே காரணம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். கரூர் மருத்துவமனையில் நிருபர்களைச் சந்தித்த அவர், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக தெரிவித்தார். மேலும், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆறுதல் கூறிய முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு கரூர் மக்கள் சார்பில் நன்றியையும் தெரிவித்தார்.
காரணம்
விபத்துக்கு காரணம் என்ன?
கூட்ட நெரிசல் குறித்து விளக்கமளித்த செந்தில் பாலாஜி, "மக்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது கூட்டத்தை நடத்தும் அரசியல் கட்சியினரின் பொறுப்பு" என்று சுட்டிக்காட்டினார். "விஜய் வருவதாக குறிப்பிடப்பட்ட நண்பகல் 12 மணிக்கே சுமார் 5,000 பேர் திரண்டிருந்தனர். நேரம் செல்லச்செல்ல, பணி முடிந்து மக்கள் அதிகமாகக் கூடினர். ஆனால், பொதுமக்களுக்கு குடிநீரோ, பிஸ்கட் பாக்கெட்டுகளோ வழங்கப்படவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் 1000 முதல் 2000 செருப்புகள் கிடந்தன, ஆனால் ஒரு தண்ணீர் பாட்டில் கூட இல்லை என்பதில் இருந்தே நிலைமையை அறியலாம்," என்று அவர் தெரிவித்தார்.
அவதி
பொதுமக்கள் அவதிப்பட்டதாக செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
மேலும், "விஜய் பேசிக்கொண்டிருந்தபோதே மக்கள் தண்ணீர் கேட்டு கூச்சலிட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன. இதுமட்டுமல்லாமல், தவெக (தமிழக வெற்றி கழகம்) வினர் போலீசாரின் அறிவுறுத்தல்களைக் கேட்கவில்லை. இதுபோன்ற மயக்கம் மற்றும் நெரிசல் சம்பவங்கள் அவரது அனைத்துப் பிரசாரங்களிலும் நடந்துள்ளன," என்றும் அவர் குற்றம் சாட்டினார். கூட்ட நெரிசல் குறித்து விஜய் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, "பொதுவாக அரசியலாக பார்க்க விரும்பவில்லை. மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்யப்பட்டன. உயிரிழந்தவர்களில் 31 பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். யார் மீது தவறு என்று பேசுவதைவிட, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்," என்றார்.
வலியுறுத்தல்
விஜய் தாமதமாக வந்தது தான் விபத்துக்கு காரணம்
பின்னர், முக்கிய கருத்தாக,"விஜய் அன்று மாலை 4 மணிக்கு வந்திருந்தால் இது போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது," என்று அவர் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார். வரும் காலங்களில் கரூர் மட்டுமல்லாமல் தமிழகத்தில் எங்கேயும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடக்காத வகையில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.