கொரோனாவால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா?
சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவின் புதிய வகை அதிகம் பரவி வருவதாலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாலும் மீண்டும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று பல செய்திகள் வெளியாகின. இதற்கு பதிலளித்த பத்திரிகை தகவல் அலுவலகம், அப்படி எந்த செய்தியும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்று தெரிவித்தது. மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை(ஜன:4) வெளியிட்ட தரவுகளின் படி, இந்தியாவில் 175 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,570 ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவில், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தபட்டுள்ளன. சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகரிப்பதற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்னொரு லாக்டவுன் போடப்படுமா?
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகள் மூடப்படும் என்றும் லாக்டவுன் போடப்படும் என்றும் பல செய்திகள் பரப்பப்பட்டு வைரலாகி வருகின்றன. இது குறித்து, PIB ஃபாக்ட் செக் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: #Covid19 காரணமாக நாட்டில் லாக்டவுன் போடப்படும் என்றும் பள்ளிகள்/கல்லூரிகள் மூடப்படும் என்றும் சமூக ஊடகங்களில் பல செய்திகள் பகிரப்படுகின்றன. ஆனால், இது உண்மையில்லை. இந்த மாதிரியான செய்திகளைப் பரப்புவதற்கு முன் அது உண்மையா என்பதை சரிபார்க்க வேண்டும். கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 15 நாட்களுக்கு மூடப்படுவது குறித்து அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. என்று கூறி இருக்கிறது.