வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு
வனப் பாதுகாப்பு (திருத்த) மசோதா-2023 மீதான சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று(ஜூன் 2) ரத்து செய்துள்ளது. வனப் பாதுகாப்பு(திருத்த) மசோதாவின் ஆவணங்கள் ஆங்கிலம், இந்தி தவிர பிற மொழிகளில் வெளியிடப்படாததால், அதை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு, வரும் திங்கள்கிழமைக்குள் மசோதாவின் தமிழாக்கம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்ததை அடுத்து, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது . இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு(ஜேபிசி) பரிசீலித்து வரும் நிலையில், மே 3ஆம் தேதி அன்று இதற்கான விளம்பரம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் வெளியிடப்பட்டது.
திங்கள்கிழமைக்குள் மசோதாவின் தமிழாக்கம் வெளியிடப்படும்
ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும் அது வெளியிடப்பட்டிருந்தால் அதற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. அதனையடுத்து, இந்த மசோதாவை தமிழில் மொழிபெயர்க்கவும், தமிழ் மொழியில் பரிந்துரைகளை ஏற்கவும் உத்தரவிடக் கோரி தீரன் திருமுருகன் என்பவர் ஒரு ரிட் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், "ஒரு முக்கியமான திருத்த மசோதாவை நிறுத்தி வைக்க விரும்பவில்லை என்றாலும், நாட்டின் அனைத்து மொழிகளிலும் திருத்த மசோதாவின் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகள் மற்றும் பத்திரிகை செய்திகளை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். அதற்காக மசோதாவை நிறுத்தி வைப்பது அவசியம்" என்று கூறியது. இந்நிலையில், வரும் திங்கள்கிழமைக்குள் மசோதாவின் தமிழாக்கம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.