'தத்தெடுக்கும் தாய்க்கும் சம உரிமை!'; வயது கட்டுப்பாட்டை நீக்கிய உச்ச நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
குழந்தைகளை தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு விதிகளில் இருந்த வயது கட்டுப்பாட்டை 'அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது' என்று கூறி உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இனி குழந்தையின் வயது எதுவாக இருந்தாலும், தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020-இன் படி, 3 மாதங்களுக்கு குறைவான குழந்தையை தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து கர்நாடகாவை சேர்ந்த வழக்கறிஞர் ஹம்சனந்தினி நந்தூரி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு இந்த முக்கிய தீர்ப்பை வழங்கியது
தீர்ப்பு
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், "ஒரு குழந்தையை உயிரியல் ரீதியாகப் பெற்றெடுப்பதற்கும், தத்தெடுப்பதற்கும் இடையில் குடும்ப விழுமியங்களில் வேறுபாடு இல்லை. எனவே, விடுப்பு வழங்குவதில் பாகுபாடு காட்டுவது அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 21-வது பிரிவுகளை மீறுவதாகும்" எனத் தெரிவித்துள்ளது. "குறிப்பாக காப்பகங்களிலிருந்து தத்தெடுக்கப்படும் வளர்ந்த குழந்தைகளுக்கு, புதிய குடும்பத்துடன் ஒன்றிணைய அதிக கால அவகாசம் தேவைப்படும். 3 மாதங்களுக்கு மேலான குழந்தைகள் என்ற காரணத்திற்காக விடுப்பை மறுப்பது குழந்தையின் நலனை பாதிக்கும்" எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் தத்தெடுப்பு விதிகளின்படி, 3 மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளைத் தத்தெடுப்பது நடைமுறையில் மிகவும் கடினமான ஒன்று. இந்த சூழலில், பழைய சட்டத்திலிருந்த வயதுக் கட்டுப்பாட்டை நீக்கியிருப்பது, தத்தெடுக்கும் ஆயிரக்கணக்கான பெற்றோர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.