தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
இந்தியாவில் ஆண்களின் தற்கொலை அதிகரித்து வருவதால், ஆண்களை குடும்ப வன்முறையில் இருந்து பாதுகாக்க தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கோடை விடுமுறை முடிந்து இன்று உச்ச நீதிமன்றம் இயல்பாக இயங்க தொடங்கிய நிலையில், இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த பொதுநல மனுவை வழக்கறிஞர் மகேஷ்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், "தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின்படி, ஒரே ஆண்டில் இந்தியாவில் மட்டும் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதில், 81,063 பேர் திருமணமான ஆண்கள் ஆவர். திருமணமான பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
"நீங்கள் ஒருதலைப்பட்சமான கதையை சித்தரிக்க விரும்புகிறீர்கள்": நீதிபதிகள்
மேலும், திருமணமான ஆண்கள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சினையை கையாளவும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆண்களின் புகார்களை ஏற்கவும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு(NHRC) உத்தரவிட வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்த நிலையில், இதை பரிசீலிக்க விருப்பமில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர். "நீங்கள் ஒருதலைப்பட்சமான கதையை சித்தரிக்க விரும்புகிறீர்கள். திருமணமான உடனேயே இளம்பெண்கள் உயிரிழக்கும் தரவுகளை எங்களிடம் கொடுக்க முடியுமா?... யாரும் தற்கொலை செய்ய விரும்பவில்லை, அது ஒவ்வொரு வழக்குகளுக்கும் மாறுபடும்" என்று கூறிய நீதிபதிகள் இந்த மனுவை ஏற்க மறுத்துவிட்டனர்.