LOADING...
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பொது இடத்தில் சிலை: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பொது இடத்தில் சிலை: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 23, 2025
01:49 pm

செய்தி முன்னோட்டம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள காய்கறி சந்தையின் நுழைவாயிலில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைப்பதற்கான தீர்மானத்தை வள்ளியூர் பேரூராட்சி நிறைவேற்றியது. இதற்கான அனுமதியையும் தமிழக அரசிடம் இருந்து பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பால்சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கருணாநிதி சிலை அமைக்க அனுமதி மறுத்ததுடன், பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக உள்ள பிற சிலைகளையும் அகற்ற உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில்,"ஒரு தலைவரின் புகழைப் பரப்ப அமைக்கப்படும் சிலை, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என உயர் நீதிமன்றம் கருதியுள்ளது. எனவே, அந்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை." எனத்தெரிவித்தது. அதோடு,"பொது இடங்களில் சிலைகள் அமைப்பது போக்குவரத்து நெரிசலையும், பொதுமக்களுக்கு சிரமத்தையும் ஏற்படுத்துகிறது." எனத்தெரிவித்தது. அரசியல் தலைவர்களுக்குச் சிலை வைப்பதற்காக, பொது இடங்களையோ அல்லது மக்களின் வரிப் பணத்தையோ பயன்படுத்துவது குறித்து தொடர் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த தீர்ப்பு வந்துள்ளது.