கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்!
கூகுள் நிறுவனத்தை சேர்ந்த யூடியூபில் வரும் ஆபாச விளம்பரங்களால் தன் படிப்பு கெடுவதாக மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த நபர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், இது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் மனு என்று கூறி மனு தாக்கல் செய்தவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த நபர் நீதிமன்றத்துக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்ததன் பேரில் அபராதம் 25 ஆயிரமாகக் குறைக்கப்பட்டது.
யூடியூப் ஆபாச விளம்பரங்கள்
"யூடியூபில் ஆபாச விளம்பரங்கள் வருவதால் என் கவனம் சிதறி அரசு தேர்வில் என்னால் தேர்ச்சி பெற முடியாமல் போய்விட்டது. ஆகவே, எனக்கு ஏற்பட்ட இழப்பிற்கு ரூ.75 லட்சம் இழப்பீட்டை யூடியூப் நிறுவனத்திடம் இருந்து வாங்கி தர வேண்டும். மேலும், இது போன்ற ஆபாச விளம்பரங்களை இந்த தளத்திலிருந்து முழுமையாகத் தடை செய்ய வேண்டும்." என்று மத்திய பிரதேசத்தை சேர்ந்த அரசு தேர்வுகளுக்குத் தயாராகும் ஒரு இளைஞர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு கொடுத்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், "உங்களுக்கு அந்த விளம்பரங்களைப் பார்க்க பிடிக்கவில்லை என்றால் அவைகளை பார்க்காமலோ நிராகரித்தோ விடுங்கள். அதற்காக இப்படிப்பட்ட மோசமான மனுவை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்" என்று கூறி அவருக்கு அபராதம் விதித்தனர்.