சபரிமலை தீர்ப்பு மறுஆய்வு: ஏப்ரல் 7 முதல் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை!
செய்தி முன்னோட்டம்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற 2018-ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள்மீது, உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் விசாரணையைத் தொடங்க உள்ளது.
விசாரணை அட்டவணை
நீதிபதிகள் அமர்வு விபரம்
தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான இந்த அமர்வில் பின்வரும் 8 நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர்: நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, எம்.எம். சுந்தரேஷ், அஹ்சானுதீன் அமானுல்லா, அரவிந்த் குமார், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ், பிரசன்னா பி. வரலே, ஆர். மகாதேவன் மற்றும் ஜோய்மால்யா பாக்சி. உச்ச நீதிமன்றத்தின் அலுவல் பட்டியலின்படி (Cause List), விசாரணை பின்வரும் தேதிகளில் நடைபெறும்: ஏப்ரல் 7 - 9 அன்று மறுஆய்வு கோரும் மனுதாரர்களின் வாதங்கள் கேட்கப்படும். ஏப்ரல் 16 - 17 அன்று மறுஆய்வை எதிர்ப்பவர்களின் (2018 தீர்ப்பை ஆதரிப்பவர்கள்) வாதங்கள் கேட்கப்படும். ஏப்ரல் 21அன்று இருதரப்புப் பதிலுரைகளும், ஏப்ரல் 22 அன்று விசாரணை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுஆய்வு மனுக்கள்
வழக்கின் பின்னணி
2018 தீர்ப்பு: 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை 'அரசியலமைப்புக்கு எதிரானது' என 4:1 என்ற பெரும்பான்மையில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பக்தர்கள், ஆன்மீக அமைப்புகள் என 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மறுஆய்வு மனுக்களுக்கு ஆதரவாக (மனுதாரர்களுக்கு ஆதரவாக) மத்திய அரசு தனது வாதங்களை முன்வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் முக்கியத்துவம்
பிற மத விவகாரங்களும் இணைப்பு
சபரிமலை விவகாரத்தோடு சேர்த்து, மசூதிக்குள் பெண்கள் நுழைவது, பிற மதத்தினரைத் திருமணம் செய்த பார்சி பெண்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது உள்ளிட்ட 'மத ரீதியான அத்தியாவசிய நடைமுறைகள்' தொடர்பான மற்ற வழக்குகளையும் இந்த 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும். 2018-ஆம் ஆண்டின் தீர்ப்பிற்குத் தற்போது வரை இடைக்காலத் தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த 9 நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு, இந்தியாவில் மத சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவத்திற்கு இடையேயான சட்டப் போராட்டத்தின் மிக முக்கியமான மைல்கல்லாக அமையும்.