பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் புகார்
பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது வரிசையாக புகார்களும், கைது சம்பவங்களும் நடந்தேறி வரும் நேரத்தில், பெண் காவலர் கொடுத்த புகாரின் விசாரணைக்காக மஹிளா நீதிமன்றத்திற்கு பெண் காவலர்கள் புடைசூழ சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில், பாதுகாப்புக்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் புகார் அளித்த நிலையில், அது குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கர் ஒரு நேர்காணலில், காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் அவரை தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து அந்த நேர்காணலை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவற்ரையும், கடந்த 10ஆம் தேதி இரவு டெல்லியில் வைத்து கைது செய்தனர் காவல்துறையினர்.
திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் புகார்
இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று காலை கோயம்புத்தூரில் இருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்டார், சவுக்கு சங்கர். பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய சவுக்கு சங்கரை, பெண்காவலர்கள் பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் அழைத்து வந்தனர். இதற்கு முன்பு பெலிக்ஸ் ஜெரால்ட்டும் பெண் காவலர்கள் பாதுகாப்பிலேயே நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கோவையிலிருந்து திருச்சி அழைத்து செல்லும் வழியில் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் புகார் கூறினார். காவலர்கள் தன்னை வேனில் வைத்து அடித்து மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்ததாக நீதிபதியிடம் அவர் தெரிவித்தார். இதையடுத்து, சவுக்கு சங்கரை பரிசோதிக்க திருச்சி நீதிபதி உத்தரவிட்டார்.