சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு
செய்தி முன்னோட்டம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், இன்று(செப்.,14)ஆவணிமாத சர்வ அமாவாசை என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு சென்று அக்னித்தீர்த்த கடலில் நீராடி, திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
அதன்பின்னர் ராமநாதசுவாமி கோயிலில் 22 தீர்த்த கிணறுகளில் நீராடி, சாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே இன்று பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதனையொட்டி 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், வருகை தரும் பக்தர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதேபோல், எவ்வித இடையூறும் இல்லாமல் பக்தர்கள் நீராடி சாமி தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.
அமாவாசை
ஏழ்மை நிலையை மாற்றும் அமாவாசை வழிபாடு
அனைத்து அமாவாசை தினங்களிலும் குறிப்பாக ஆவணி மாதத்தில் வரும் இந்த சர்வ அமாவாசை தினத்தன்று நமது பித்ருக்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வதோடு, காக்கைக்கு உணவளித்து ஆசீர்வாதம் பெறுவது அவசியம் என்று கூறப்படுகிறது.
இத்தகைய வழிபாடுகளால் பித்ரு சாபங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வினை அடையலாம் என்றும் கூறுகிறார்கள்.
இந்த தினத்தில் வீட்டின் வாசலை சுத்தம் செய்யலாம், ஆனால் கோலமிட கூடாது.
பெற்றோர் இல்லாத ஆண்கள் எள்ளும், தண்ணீரும் கொடுத்து கட்டாயம் தர்ப்பணம் செய்யவேண்டும்.
நமது முன்னோர்களை நினைத்து இவ்வாறு வழிபாடு மேற்கொள்வதன் மூலம் வீட்டில் ஏழ்மை நிலை மாறுவதுடன், எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.