சனாதன விவகாரம் - உதயநிதிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக பல தரப்பினர் வழக்குப்பதிவு செய்தும், அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரியும் மனுதாக்கல் செய்து வருகிறார்கள். இந்நிலையில், உதயநிதிக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "சனாதன கோட்பாடுகளை ஒழிக்கவேண்டும் என்று தான் உதயநிதி கூறினாரே தவிர எந்த மதத்தினரையும் புண்படுத்தும் வகையில் அவர் பேசவில்லை. முழு விவரம் தெரியாமல் பிரதமர் மோடி பேசலாமா?"என்று கேள்வியெழுப்பியுள்ளார். தொடர்ந்து சந்திராயன் விடும் இக்காலத்திலும் சாதி வேற்றுமைகளை கற்பித்தும், பாகுபாடுகளை வலியுறுத்தியும் பிளவுபடும் எண்ணங்களுக்கு ஆதரவாக சாஸ்திரங்கள் மற்றும் பல பழைய நூல்களை மேற்கோள்காட்டி பிரச்சாரங்களில் ஈடுபடத்தான் செய்கிறார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
உதயநிதி பேசியதை நன்கு ஆராயாமல் கருத்து தெரிவிக்கும் மத்திய அமைச்சர்கள் - மு.க.ஸ்டாலின்
மேலும் உதயநிதி பேசியதற்கு விளக்கமளித்துள்ள அவர், 'இனப்படுகொலை'என்னும் வார்த்தையினை அமைச்சர் உதயநிதி தமிழிலோ ஆங்கிலத்திலோ எந்த இடத்திலும் உபயோகப்படுத்தவில்லை. ஆனால் அவர் அவ்வாறு கூறியதாக பொய்யான செய்திகள் பரப்பப்படுகிறது. பொய்யர்கள் தான் இவ்வாறு தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்றால் பொறுப்புள்ள மத்திய அமைச்சர்களாவது உண்மையில் உதயநிதி என்ன பேசினார் என்பதை நன்கு ஆராய்ந்த பின்னர் கருத்து சொல்லியிருக்கலாம். அதனை செய்யாமல், அமைச்சர்கள் அமித்ஷா, அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் அதே பொய்யான தகவலை பரப்புகிறார்கள் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உத்திரப்பிரதேச அரசாங்கம் அமைச்சரின் தலைக்கு விலை என்று கூறிய சாமியார் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காதது குறித்தும், ஆனால் உதயநிதி மீது வழக்குத்தொடர்ந்துள்ளது குறித்தும் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கேள்விகளை அடுக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.