சஸ்பெண்ட் செய்யப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நாச்சிமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. சேலத்திலுள்ள ஓமலூர் அருகே உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் பணிபுரிந்து வருபவர் பேராசிரியர் நாச்சிமுத்து. இவர் இம்மாதத்தோடு ஓய்வு பெறவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் மீது நிதி மோசடி, சரியாக மாணவர்களுக்கு பாடங்கள் எடுத்துரைப்பதில்லை, மாணவர்களை தகாத முறையில் பேசுகிறார் போன்ற பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இந்த புகார்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.
அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்
அதன்படி, முதற்கட்ட விசாரணையில் பேராசிரியர் மீது கூறப்பட்ட புகார்கள் அனைத்திலும் உண்மை தன்மை உள்ளது என்பது தெளிவாகியுள்ளது என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரான ஜெகநாதன், பேராசிரியர் நாச்சிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவர் இது குறித்து கூறுகையில், "பேராசிரியர் நாச்சிமுத்து மீது கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள தனி விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழு விசாரணை நடத்த இடையூறு இல்லாமல் இருக்கவே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளார். தொடர்ந்து, விசாரணை குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.