சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு - ஆன்லைன் முன்பதிவு துவங்கியது
கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகரவிளக்கு பூஜைக்களுக்கு திறக்கப்படும். அதேபோல், மலையாள கருகிடக மாத பூஜை மற்றும் தமிழ் ஆடி மாத பூஜை ஆகியவற்றிற்கும் நடை திறக்கப்படும். அதன்படி, நாளை(ஜூலை.,16) மாலை 5.30 மணியளவில் ஐயப்பன் கோயில் நடைத்திறக்கப்படவுள்ளது. இதன் காரணமாக தற்போது கோயிலினை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஜூலை 21ம் தேதி வரை கோயில் திறந்திருக்கப்படும் பட்சத்தில் தினமும் வழக்கம் போல் பூஜைகள் நடப்பதோடு, இரவு 7 மணிக்கு படிபூஜைகளும் நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்கள் முன்பதிவு வாயிலாக அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளதையடுத்து, இதற்கான முன்பதிவு sabarimalaonline.org என்னும் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் துவங்கியுள்ளது.
ஆடி அமாவாசை - பம்பை ஆற்றில் பலி தர்ப்பணம்
மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக செங்கனூர், பத்தனம், கோட்டயம், திட்டை, எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகளை கேரள அரசு போக்குவரத்து கழகம் செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆடி அமாவாசை வரும் ஜூலை 17ம் தேதி வருவதனையொட்டி பம்பை ஆற்றில் பலி தர்ப்பணம் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் நேற்று(ஜூலை.,14) திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்படி,ஆடி அமாவாசை என்பதால் இந்த பலி தர்ப்பணம் செய்ய கூடுதல் பூசாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும், அன்றைய தினம் அதிகாலை 2.30மணி முதல் பம்பையாற்றில் இந்த தர்ப்பணம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோயிலில் ஆடிமாத புத்தரிசி பூஜையும் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.