சபரிமலை தரிசன ஆன்லைன் முன்பதிவு அக்டோபர் 29-ஆம் தேதி தொடக்கம்: தேவஸ்வம் போர்டு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டிற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு வரும் அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்கவுள்ளது. கோயிலில் பக்தர்கள் கூட்டத்தை முறைப்படுத்தி நெரிசலின்றி தரிசனம் செய்ய வைக்கும் நோக்கில், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு இந்த இணையவழி முன்பதிவு நடைமுறையைச் செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் வரும் நவம்பர் 16-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஆன்லைன் முன்பதிவு அக்டோபர் 29 காலை 10:00 மணிக்குத் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பாட் புக்கிங்
இணையதள முன்பதிவு மற்றும் தினசரி அனுமதி
சபரிமலை தரிசனத்திற்கு www.sabarimalaonline.org என்ற தளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் நிலக்கல் - பம்பை வழியே தினமும் 60,000 பேருக்கும், எருமேலி பெருவழிப் பாதை மற்றும் வண்டிப்பெரியாறு சத்திரம் வழியே தலா 3,000 பேருக்கும் என நாள் ஒன்றுக்கு மொத்தம் 66,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படுகிறது.
இணையவழியில் பதிவு செய்யத் தவறும் வெளிமாநில பக்தர்களின் வசதிக்காக நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில் 'ஸ்பாட் புக்கிங்' மையங்களும் செயல்பட உள்ளன.
மேலும் பக்தர்களுக்குத் தங்குமிடம், குடிநீர் மற்றும் முதலுதவி மருத்துவ வசதிகளைத் தேவஸ்வம் போர்டும் கேரள அரசும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.