சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளை இந்தியா எப்படி முன்னெடுத்து செல்ல போகிறது: பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்
இரண்டு நாட்களுக்கு முன் ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் கேபினட் அமைச்சராக பதவியேற்ற பாஜக தலைவர் எஸ்.ஜெய்சங்கர் இன்று இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இன்று ஒரு இந்நிலையில், இன்று ஒரு நேர்காணலில் பேசிய அவர், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெறுவது, சீனா மற்றும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகளை முன்னெடுத்து செல்வது குறித்து விளக்கியுள்ளார். "இது பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், மோடி 3.0 இன் வெளியுறவுக் கொள்கை மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்று நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்... எங்களைப் பொறுத்தவரை, இந்தியாவின் செல்வாக்கு படிப்படியாக வளர்ந்து வருகிறது." என்று அவர் கூறியுள்ளார்.
"உலகில் இந்தியாவின் அடையாளம் நிச்சயமாக அதிகரிக்கும்"
மேலும், தொடர்ந்து பேசிய அவர், "படிப்படியாக வளர்ந்து வருகிறது, இது நமது சொந்த உணர்வின் அடிப்படையில் மட்டுமல்ல, மற்ற நாடுகளும் அதை தான் நினைக்கின்றன. இந்தியா உண்மையிலேயே தங்கள் நண்பன் என்று பிற நாட்டினர் உணர்கிறார்கள். நெருக்கடி காலங்களில், உலகளாவிய தெற்குடன் நிற்கும் ஒரு நாடு இருந்தால், அது இந்தியாவாக தான் இருக்கும். ஜி 20 தலைவர் பதவியில் இருந்தபோது ஆப்பிரிக்க யூனியன் உறுப்பினர்களை நாங்கள் முன்வைத்தபோது, உலகம் நம்மை நம்பியது மற்றும் எங்கள் பொறுப்புகளும் அதிகரித்து வருவதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். எனவே பிரதமர் மோடியின் தலைமையில், உலகில் இந்தியாவின் அடையாளம் நிச்சயமாக அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று கூறியுள்ளார்.
எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம்: எஸ்.ஜெய்சங்கர்
"எந்த நாட்டிலும், குறிப்பாக ஜனநாயகத்தில், ஒரு அரசாங்கம் தொடர்ச்சியாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்படுவது மிகவும் பெரிய விஷயமாகும். எனவே இன்று இந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை நிறைய இருப்பதை உலகம் நிச்சயமாக உணர்ந்திருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் சீனாவைப் பொறுத்தவரை, அந்த நாடுகளுடனான உறவுகள் வேறுபட்டவை, மேலும் சீனாவைப் பொறுத்தவரை எங்கள் கவனம் எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இருக்கும்."என்று அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தீர்வு காண இந்தியா முயற்சிக்கும். "பாகிஸ்தானுடன், பல ஆண்டுகளாக நிலவும் எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்சினைக்கு நாங்கள் தீர்வு காண விரும்புகிறோம்..." என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.